Mar 13, 2012

+2 சாமியார்கள்

காலையில் ஏதோ ஒரு இடத்தில் +1  முடிவு பற்றிய ஒரு பதிவு பார்த்தேன். +1 முடிவுகள் வந்து +2 ஆரம்பிக்க உள்ள காலம் என்ன தெரியுமா? 2 நாட்கள். ஆண்டு விடுமுறை - 2 நாட்கள். என்னய்யா விளையாடுகிறீர்களா?

ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு இருந்துடு. டிவி பாக்காதே. விளையாட்டு பக்கம் போயிராதே. காலைலே மூணு மணிக்கு எழுந்திரு. பத்து வருஷக் கொஸ்டின் பேப்பரைத் திருப்பி திருப்பி எழுதி ப்ராக்டிஸ் பண்ணு. பதினோராவது கேள்வி எல்லாம் வராது. டெய்லி டெஸ்ட், வாரம் ஒரு முறை பரீட்சை, மாதம் ஒரு முறை மாடல் எக்ஸாம். ஐ ஐ டி கோச்சிங், மேத்ஸ் ட்யூஷன் ப்ளா ப்ளா என்று கர்ப்பஸ்திரீக்கு அறிவுரை போல ஒரு வருடத்தை (பல சமயங்களில் 2-3 வருடங்களிக் கூட) சாமியார் வாழ்க்கை வாழ வைக்கிறோம் மாணவர்களை.

ஒரு தலைமுறையையே நாசம் செய்து வைத்திருக்கிறோம். +2வில் வரும் மார்க்குகள்தான் வாழ்க்கை என்று ஒரு கற்பிதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். பேசும்போது என்ன பேசினாலும் நடைமுறையில் மார்க்குதான் தெய்வம். அதை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீருவோம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

யாரை இதற்குக் குறை சொல்வது? பெற்றோரையா? பள்ளியையா? கல்வி முறையையா?

மூன்றுமே இல்லை என்பதுதான் என் வாதம்.

பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் மூன்று மணி நேரத்தில் பதினாறு தாள்களில் என்ன எழுதுகிறானோ / ளோ அதுதான் முழு வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் என்று ஆன சமுதாயச் சூழல்தான் முக்கியக் காரணம். அந்தத் தேர்வின் மதிப்பெண்கள்தான் அவன் போகப் போகும் கல்லூரியைத் தீர்மானிக்கின்றது. அவன் / அவள் போகப்போகும் கல்லூரிதான் வேலையைத் தீர்மானிக்கப் போகிறது. வேலைதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகிறது.. இந்த மாயச் சுழல்தான் அந்த மதிப்பெண்களுக்கு மரியாதையைக் கூட்டுகின்றது - இந்த விஷயத்தை சொல்லி வைத்தாற்போல எல்லாரும் கவனிக்கத் தவறுகின்றனர். 

அந்த மதிப்பெண்களுக்கு இருக்கும் அபரிமித மரியாதையே மார்க் எடுத்தே ஆகவேண்டும் - அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று பெற்றோர்களை இறங்க வைக்கிறது. இப்போது இருக்கும் தலைமுறையினர் - ஒன்று படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த தலைமுறை - அல்லது படிப்பால் மட்டும் முன்னுக்கு வந்த மற்ற மத்திய வர்க்கத்தினரைப் பார்க்கும் தலைமுறை. பில் கேட்ஸ் காலேஜ் ட்ராப் அவுட் என்று ஃபேஸ்புக்கில் தினம் தினம் பார்த்தாலும் எல்லாரும் பில் கேட்ஸ் ஆவதில்லை என்ற உண்மை உரைப்பதால் படிப்பை மட்டுமே - அதுவும் உயர்கல்வியை மட்டுமே - குறிப்பாக எஞ்சினியரிங்கை மட்டுமே குறிவைத்து வாழ்க்கையை அமைக்க வைக்கிறது.
 
எஞ்சினியரிங்குக்கு தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் அமோக ஆதரவு ஆச்சரியம் அளிக்கிறது. எத்தனை காலேஜ்கள் - தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மொத்த இந்தியாவின் எஞ்சினியரிங் பட்டதாரிகளின் தேவையை தமிழ்நாடே தர இயலும் என்ற அளவுக்கு இங்கே காலேஜ்கள் இருக்கின்றனவாம். ஏன் இத்தனை? இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மற்ற அனைவருக்கும் வேலை இல்லாமல் போனால்தான் தமிழகத்து எஞ்சினியர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும் - அப்படியென்றால் நிச்சயம் தமிழகத்து எஞ்சினியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல்தான் இருக்கப் போகிறார்கள். எந்தப் பாதிக்கு வேலை கிடைக்கும்? முக்கியக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு. யார் முக்கியக் கல்லூரிகளில் இடம் பிடிக்கப் போகிறார்கள்? நன்றாகப் படிக்கும் மாணவர்கள். நன்றாகப் படிப்பார்கள் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? +2 மதிப்பெண்களை வைத்து. ஆக, இந்த மதிப்பெண் மரியாதைக்கு இந்தச் சுழல் சூழல்தான் முக்கியக் காரணம்.

அப்படியென்ன எஞ்சினியரிங் மேல் மோகம்? டாக்டர்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள், எல்லாரும் ப்ரொஃபஷனல்கள் தானே? அந்தத் தொழில்களில் இல்லாத ஆசை ஏன் எஞ்சினியரிங் மேல் மட்டும்?

படிப்பு என்பதை கல்வி என்று சிந்தித்த காலம் மலையேறிப் போய், முதலீடு என்று சிந்திக்கிற காலம் வந்தே பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம் இப்போது predominant ஆக இருக்கும் படிப்பால் மட்டுமே முன்னுக்கு வந்த தலைமுறை. முதலீடு என்று வந்தவுடன் ப்ரேக் - ஈவன் என்பதைப் பார்க்கவும் வேண்டும் அல்லவா? 

ஒரு மாணவன், 17 ஆம் வயதில் +2 முடித்தால் 21 ஆம் வயதில் எஞ்சினியர். அவன் முதல் வேலை படித்து முடிக்கும் முன்னரே கேம்பஸில் கிடைத்து விடுகிறது. (எலைட் மாணவர்களுக்கு). ஆனால் அவன் ஒரு டாக்டராக வேலை தொடங்க குறைந்தது 25 வயதாவது ஆக வேண்டும். பிறகும் எதேனும் ஒரு மருத்துவமனையின் அடி ஆழத்தில் ட்யூட்டி டாக்டராக ஆரம்பித்து கைராசி எனப் பெயர் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நரைத்து விடுகிறது. வக்கீல்கள் பெயர் வாங்க இன்னுமே அதிகக் காலம் ஆகும். கேஸ் கிடைக்க வேண்டும். சீனியரிடம் இருந்து விடுபடவேண்டும்..ஆடிட்டர்கள் கதையோ அமோகம். சி ஏ பாஸ் செய்வதற்குள்ளேயே பாதி பேருக்கு நரைத்து விடுகிறது.

உடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங். 

மார்க் வேண்டும். அதற்கு நல்ல பள்ளியாகப் பிடிக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது எது? ஆசிரியர்கள் அன்பாக நடந்துகொண்டு நல்லபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியா? அதற்கு என்ன அளவுகோள்?  போன முறை வரை அவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன? எத்தனை ஸ்டேட் ராங்க்.. இவைதானே?  

பள்ளிகளுக்கு யுனிக் செல்லிங் பாயிண்ட் அவர்கள் மாணவர்களிடம் இருந்து கறக்கும் மதிப்பெண்கள்தான் என்று ஆன பிறகு, ஒரு மாணவன் முடியவில்லை, படிக்கத் தெரியவில்லை என்று சொன்னால் அவர்களுடைய யூ எஸ் பிக்கு பாதிப்பு வராதா? அவர்கள் எப்படி அதை விடுவார்கள்? ஏதேனும் செய்து - அவனுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது பள்ளியில் இருந்தே விலக்கி அவர்களுடைய ஃபிகர்களுக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளத் தானே பாடுபடுவார்கள்? ஒரு மாணவன் தோற்றாலும் 100 சதம் இரட்டை இலக்கமாகி விடுகிறதே..

ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் மரியாதை பற்றி நிறைய பேசப்படுகிறது - குறிப்பாக சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட பிறகு. 'அந்தக் காலத்துல நாங்க எல்லாம்' ரேஞ்சில் கருத்துகளை உதிர்க்கும் அனைவரும் மறப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று அவர்கள் ஆசிரியர்கள் எத்தனை பேரை அவர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? ஒவ்வொரு மாணவனும், ஆறாம் வகுப்பில் இருந்து ஞாபகம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் - 12 ஆம் வகுப்பு வரை - 35- 40 ஆசிரியர்களைப் பார்க்கிறான். 40 வயதான அப்பாவிடம் அந்த 40 ஆசிரியர்களின் பெயரையும் கேட்டால் நினைவிருக்குமா?  அதே விகிதத்தில் இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது கவனிக்க வேண்டிய விஷயம் -அவர்கள் படிப்பிற்காகக் கொடுத்த பணத்தை. பணத்தின் மதிப்பு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதால் நேரடி மதிப்பைப் பார்க்காமல் இப்படிப் பார்க்கலாம் - அவர்கள் படித்தபோது பள்ளிகளின் ஃபீஸ் அவர்கள் அன்றைய குடும்ப வருமானத்தில் எவ்வளவு சதவீதம்?  இன்று எவ்வளவு? ஆராய்ச்சியே பண்ணத் தேவையில்லை. சதவீதமே மிக அதிகமாக ஆகியிருக்கிறது. அன்று பள்ளிக்குக் கொடுத்த சம்பளம் ஏறத்தாழ ஓசிதான். ஓசியிலே கற்பிக்கும்போது மரியாதை வரத்தான் செய்யும். இன்று வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதம் பள்ளிக்குப் போகும்போது எதிர்பார்ப்புகளும் அதிகம். அவர்கள் சும்மா சர்வீஸ் ப்ரொவைடர்கள்தானே என்ற எண்ணத்தில் மரியாதை குறையத்தான் செய்கிறது. அதை மாற்ற முடியாது. 

கல்விமுறையைப் பற்றிச் சொல்வதும் வீண். சமுதாயம் என்ன கேட்கிறதோ அதைத்தான் கல்விமுறை செய்கிறது. மெக்காலே கல்வித்திட்டத்தைத் திட்டுவது நம் எல்லாருக்கும் செல்லப் பொழுதுபோக்கு. 'யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் சொல்லிக் கொடுங்கள்' வாதமாகப் பேசும்போது இனிமையாக ஒலிக்கிறதே, இதன் நடைமுறை சாத்தியக் கூற்றைப் பற்றி யோசித்திருப்போமா?  நாம் கல்வியை பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவைத்துவிட்டோம். விட்டில் பூச்சிகளைப் போல எல்லாரும் ஒரே இடத்தில் மொய்க்கும்போது பேகான் ஸ்ப்ரே அடிக்கத்தான் செய்வார்கள். எப்படி உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட படிப்பில் ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? நுழைவுத் தேர்வு போன்ற இரண்டாம் நிலை ஃபில்டர்களும் இல்லாத பட்சத்தில்?

எல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது? விவாதிக்கலாமா?

33 பின்னூட்டங்கள்:

Vanchinathan said...

இதற்கு இன்னமும் அடிப்படைக் காரணம். எவ்வளவு பணம் சம்பாத்தியம் என்பதாலேயே ஒருவரை எடைபோடும் மனப்பான்மையால்தான். பொது இடத்தில் ஒருவர்யவயதானவரென்றால் மரியாதை (பஸ்ஸில் இடங் கொடுப்பது), ஆசிரியராய் இருந்தால் பயங் கலந்த மரியாதை போய்விட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒருவன் சம்பாதிப்பதை வைத்தே மரியாதை என்ராகிவிட்டது. சந்தேகமிருந்தால் மேட் ரிமோனியல் விளம்பரத்தைப் பார்க்கவும். கல்யாணத்தை வெளிப்படையாக டென்டர் விளம்பரம்போல் ஆக்கிவிட்ட பெருமை நம் சமூகத்தைச் சாரும்

ராஜ் said...

எதுக்கு 90% மாணவர்கள் எஞ்சினியரிங் கோர்ஸ் சேருகிறார்கள், என்பதற்கும் நீங்கள குடுத்த பதில் உண்மையானது. இப்ப படிப்பு என்பது பிசினஸ் மாதிரி ஆகி போச்சு.
ppl need early returns for their College Inverstements...
இந்த மாய சூழலில் இருந்து வெளியே வருவது நம்ப கையில தான் இருக்கு. நம்ப நம்பளோட அடுத்த தலைமுறைக்கும் அவங்க விருப்ப பட்ட படிப்பை படிக்க அனுமதி குடுக்க வேண்டும்.
அப்புறம் ஸ்கூல் பீஸ், இன்னும் இலவச கல்வி அரசு பள்ளியில இருக்க தான் செய்யுது.
நம்மில் நிறைய பேர் அத உபயோக படுத்த மட்ட்டேன்குறோம்.

ஹுஸைனம்மா said...

//ஆண்டு விடுமுறை - 2 நாட்கள்//

அட, 2 நாள் லீவா!! அதிர்ஷ்டம் செய்தவர்கள்!!

11 & 12 வகுப்பு படிக்கும் மாணவர்களின் பள்ளி நேரம் காலை6 -மாலை 7, ஞாயிறு உடபட!!

ஆமாம். பள்ளிகளில் இப்போவெல்லாம் 12-ம் வகுப்புப் பாடத்தை, 11-ஆம் வகுப்பிலேயே நடத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். காலை 6-8 & மாலை 5-7வரை 12-ம் வகுப்பு பாடங்கள். இடப்பட்ட 9-4ல் 11-ம் வகுப்பு பாடங்கள்!!

இப்படி நடத்தி, 11-ஆம் வகுப்புப் பாடஙக்ள் முடிவதற்குள் 12ம் வகுப்பின் பாடங்கள் முடித்து ரிவிஷன் ஆரம்பித்துவிடுகிறது!! பிறகென்ன, ரிவிஷன், டெஸ்ட், ரிவிஷன், டெஸ்ட்... இதேதான் ஒரு வருடம் முழுதும்!!

இப்படி ரிவிஷன், டெஸ்ட் என்று மாறி மாறி எழுதும் பிள்ளைகள் +2வில் நல்ல மார்க் எடுத்து, எஞ்சினியரிங் சேர்ந்துவிடுகிறார்கள். ஆனால், பிறகு..?

இந்த வருடம் முதலாமாண்டு இஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50% தானாம்!! பின்னே, காலேஜில் என்ன ரிவிஷனு, டெஸ்டும், இண்டென்ஸிவ் ட்ரெய்னிங்குமா தருவாங்க?

என் மகனை 10-ம் வகுப்பு (இங்கு) முடிந்ததும், 11-ம் வகுப்பில் இந்தியாவில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தேன். இந்தக் கொடுமைகளை நேரடியாகக் கண்டு அதிர்ந்து, இங்கேயேதான் +2வும் என்று முடிவு செய்துவிட்டேன்(இன்ஷா அல்லாஹ்).

தமிழக்த்தின் கல்விமுறிஅ நிறையவே என்னைப் பாதித்திருக்கிறது. வளரும் இரண்டு குழந்தைகளின் தாயாகப் பதறிப் போய் நிற்கிறேன். மதிப்பெண்களால் எடை போடக்கூடாது என்று தெரிந்திருந்தாலும், இதேபோல peer pressure-ஆல் நானும் அப்படி ஆகிவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

விவாதத்தைக் கவனிக்க ஆவலாயிருக்கிறேன். ஆனாக்க, கமெண்ட் ஃபாலோ-அப் இல்லியே..... :-(((

ஹுஸைனம்மா said...

கீதமஞ்சரி என்கிற பதிவர், “ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம்” என்கிற தலைப்பில் சில பதிவுகள் (http://geethamanjari.blogspot.com)எழுதியிருந்தார். நல்லா இருந்தது. பிரமிப்பாவும் இருக்கு. அதே சமயம் இது இந்தியாவுல எப்படி வொர்க் அவுட் ஆகும்னும் சந்தேகம் இருக்கு.

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு.ஆனால் முதல் தலைமுறையினர்க்கு வேறு நல்ல ஆப்சன் இல்லை.

கீதமஞ்சரி said...

இன்றையக் கல்விமுறை பற்றிய தெளிவான அலசல். தொடரும் விவாதங்களுக்காய் காத்திருக்கிறேன்.

ஹூஸைனம்மாவின் வழிகாட்டுதலின்படி இத்தளத்துக்கு வந்தேன். மிகவும் பயனுள்ள பதிவுகளை இடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.

பினாத்தல் சுரேஷ் said...

வாஞ்சிநாதன்,

பணமைய உலகமாகத்தான் மாற்றி வைத்திருக்கிறோம். பணவரவு வாய்ப்பற்ற விளையாட்டோ எக்ஸ்ட்ரா கரிகுலர் விஷயங்களோ இல்லாமல்தான் இருக்கிறது இன்றைய சமூகம். நாளையை நினைத்தால் பயமாக இருக்கிறது.

மேட்ரிமோனியல் பற்றி நீங்கள் சொன்னதும் நூற்றில் ஒரு வார்த்தை. கணவன் மனைவியின் சம்பளமும் பச்சை அட்டையுமே திருமணத்தைத் தீர்மானிக்கும் என்றால் காதலுக்கு வாய்ப்பெங்கே?

அடுத்த 10 வருடங்களில் உயரத்துக்குப் போகப்போகும் தொழில் - விவாகரத்து லாயர்தான்!

பினாத்தல் சுரேஷ் said...

ராஜ்,

அவர்கள் விருப்பப்பட்ட படிப்பு என்பதும் ஒரு மித் தான். பொதுவாக குழந்தைகளுக்கு விருப்பப்படிப்பு எது என்று கேட்டால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் கேரக்டர்களின் தொழில்களைத்தான் சொல்வார்கள். டாக்டர் வக்கீல் போலீஸ்..

சந்திக்காத கேரக்டர்களின் தொழில்கள்தான் அதிகம் எனும்போது விருப்பம் எப்படி வரும்?

கல்வியின் விலை IS NOT DIRECTLY PROPORTIONAL TO கல்வியின் தரம். அது புரிவதில் எல்லாருக்குமே சிரமம் இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

ஹுசைனம்மா..

peer pressure பற்றி நீங்கள் சொன்னது 500% உண்மை.

என்ன? 88%தானா? ஒழுங்கா படிக்க மாட்டானா உங்க பையன்? அப்புறம் ஐஐடி கோச்சிங் போறதில்லையா? எப்படிதான் உருப்படப்போறானோ..

இந்தப் பேச்சுகளை அன்றாடம் கேட்டுக்கொண்டு இருக்கும்போது 88% என்னவோ ஃபெயில் மார்க் போலத் தோற்றமளிப்பது தவிர்க்க முடியாதது.

பினாத்தல் சுரேஷ் said...

முரளி கண்ணன்,

எந்த முதல் தலைமுறையினரைச் சொல்கிறீர்கள்? முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்தவர்களையா? அவர்களை இந்த நிலை இன்னும் அதிகம் பாதிக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

விளக்க முடியுமா?

பினாத்தல் சுரேஷ் said...

கீதமஞ்சரி,

வருகைக்கு நன்றி. உங்கள் ஆஸ்திரேலியக் கல்விமுறை பற்றிய பதிவுகள் படித்தேன், வயிறெரிந்தேன் :-)

Anonymous said...

இந்தியாவில் மட்டும் தன் இப்படியா என்று நினைக்க தோன்றுகிறது.நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் கல்வியின் தரம். நல்ல பள்ளிகள் இல்லாமை.(கோச்சிங் மட்டுமே கொடுக்கும் பள்ளியை சொல்லவில்லை.)எல்லாமும் தான் காரணம்.ஆசிரிய பயிற்சி பெற்றவளாக நடக்கும் அவலங்களை பார்த்துக் கொண்டிருக்கும் கையறு நிலையில்..........

Anonymous said...

இந்தியாவில் மட்டும் தன் இப்படியா என்று நினைக்க தோன்றுகிறது.நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் கல்வியின் தரம். நல்ல பள்ளிகள் இல்லாமை.(கோச்சிங் மட்டுமே கொடுக்கும் பள்ளியை சொல்லவில்லை.)எல்லாமும் தான் காரணம்.ஆசிரிய பயிற்சி பெற்றவளாக நடக்கும் அவலங்களை பார்த்துக் கொண்டிருக்கும் கையறு நிலையில்..

Anonymous said...

கமெண்ட்ஸ் எங்க சார் போச்சு. அட போங்க நான் வரல.

Unknown said...

//எல்லாவித careerகளுக்கும் சம மதிப்பு இருந்தால்தான் இந்த மாயச் சுழலில் இருந்து விடுபட முடியும். அதற்கு என்ன செய்வது? விவாதிக்கலாமா?//

செய்யும் தொழிலே என்பது வெறும் பழமொழியாக நிற்காமல் நடைமுறையிலும் சாத்தியமாக வேண்டும்...அந்த விவாதமே தற்கால கல்விமுறைக்கு நேர்ந்திருக்கும் வாதத்தை நீக்கும்

Vanchinathan said...

நீங்கள் சொல்வது போல் இஞ்சினியரிங் படிப்புக்கு அதிக கிராக்கிதான்.
டாக்டர் படிப்புக்கு பொதுவில் மதிப்பு குறைந்ததுக்கு இன்னொரு காரணம்.
டாக்டர் என்றால் நன்றாக சம்பாதிப்பதற்கு அதிக வருடங்கள் ஆகிறது மட்டுமல்ல. சமீப காலமாக கவனித்தீர்களா? டாக்டர் புள்ளைங்களாம் நிறைய பேர் டாக்டர் ஆகிறார்கள். ஆமாம் அப்பவோட ஆஸ்பத்திரியிலேயே டூட்டி டாக்டராக இருந்தால் "ஓனர் பையண்" என்று இருக்கலாம்.
டாக்டர்கள் டாக்டர்களைக் கல்யாணம் செய்து கொள்வது, முந்தைய தலைமுறை டாக்டர் கட்டிவைத்த ஆஸ்பத்திரிச் சொத்தை ஆள்வதற்கு நிறையபேர் வேணுமே. குலத்தொழில் புது விதமாக பெரிதாகத் தலைதூக்கி வருகிறது. நடிகர் பையன் நடிகன், இசையமைப்பாளர் மகன் இசையமைப்பாளர்,
எனவே இஞ்சினியரிங் படிப்பில்தான் ஓரளவு ஜன்நாயக்ம் இருக்கிறது. மற்றவர்களோடு
போட்டிபோட முடிகிறது. அதனால் போட்டி இருக்கிறது.

rv said...

பினாத்தல்,
அருமையான பதிவு. தீர்க்கமான பார்வை.

இப்பதிவு வலைப்பூக்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது.

வாழ்க நீ! தொடர்க நின் தமிழ்த்தொண்டு!

rv said...

முந்தையது பழக்கதோசம்.

எப்போதுமே கோர்வையாக எழுதியது இல்லை. ஆதலால்,
-----------------
1. அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வுகள் சாத்தியமானால் இந்த +2 மோகம் குறையலாம்.

2. அரசு மருத்துவர்கள் எவ்வாறு தனியார் க்ளினிக் வைப்பது சட்டப்படி குற்றமோ அதேபோல் அரசுடைமையான அல்லது அரசுநிதி பெறும் பள்ளிகளிலோ பணிபுரியும் ஆசிரியர்கள் ட்யூஷன் எடுக்கக்கூடாது என ஒரு ஜி.ஓ போடலாம்.

3. +2வில் பெரிதாக சாதிக்கவில்லையென்றாலும் வாழ்க்கை அப்படியொன்றும் பாழாகிவிடாது என்பதற்கு என்னையும் உங்களையும் இங்கே கமெண்ட் போடுகிறவர்களையும் சேர்த்து இங்கு பலபேர் இருக்கிறோமே. நாமெல்லாம் சவுகர்யமாக இல்லையா? இல்லை இதுபோதாதா? ஒரு லட்சமும் ரெண்டு லட்சமும் கொடுத்து ப்ரீ-கே ஜி சேர்க்கிற அளவுக்கு நமக்கு வசதிவாய்ப்பு கொடுத்தது பலமுறை பிட்டடித்து பலமுறை பெயிலாகி பக்கத்துக் குட்டிச்சுவற்றிற்கு பின்னாலே திருட்டுதம் அடித்தபடி நாம படித்த சாதாபடிப்புதானே?

ஆனால் 100% ஸ்டேட் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பிலேர்ந்து ஐ.ஐ.டி கோச்சிங்கும் சேர்த்துவிட்டு அத்தகைய கல்விநிறுவனங்களில் படித்த காரணத்தினால் மட்டுமே பில் கேட்ஸாக ஒரே தலைமுறையில் மாறிவிடலாம் என்ற பெற்றோர்களின் நப்/பேராசையும் இதில் அடங்கியிருக்கிறது.

4. பெற்றோரும் பதின்மவயதில் தாங்கள் எப்படி இருந்தோம் என்று மறந்துபோய்விடுகிறார்கள். peer pressure என்பது பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. ஐம்பது வயதிலும் நாம் செய்யாத அகில உலக சாதனையெல்லாம் பதின்ம வயதில் நம்பிள்ளை செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அநியாயமானது.

5. இன்னும் பதினெட்டு வருஷத்துல இதெல்லாம் எங்க போய் முடியுமோனு இப்பவே கவலைப்படவைத்துவிட்டீர்கள். பேசாமல் டோனி நடாலிடம் டென்னிஸ் விளையாட அனுப்பிவைத்துவிடலாம் போலிருக்கிறது. :)

பினாத்தல் சுரேஷ் said...

உமா கணேஷ் - இந்தியாவில் மட்டும்தானா இந்த நிலைமை? தெரியவில்லை. மூன்றாம் உலக நாடுகளில் எல்லாமே இருக்கலாம்.

தேவ் - / செய்யும் தொழிலே / - தெய்வமாகக் கும்பிடவும் சில வரையறைகள் இருக்கின்றன. கூரையைப் பிச்சிகிட்டுக் கொடுத்தாதான் தெய்வம். வாய்க்கும் வயித்துக்கும் பாலம் போட்டா சாத்தான். எனவே, காசில்லாத தொழில்கள் எல்லாம் யூஸ்லெஸ். இப்படித்தான் இருக்கோம் நாம!

பினாத்தல் சுரேஷ் said...

வாஞ்சிநாதன்..

டாக்டர் ஒரு குலத்தொழில் ஆகிவிட்டதென்னவோ உண்மைதான். முதல் தலைமுறை டாக்டர் ஒன்று அரசாங்க ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும் அல்லது க்ளினிக்கில் பத்தோடு ஒன்றாக வாழவேண்டும். தான் ஒரு க்ளினிக் கட்ட நிறைய நிறைய அனுபவம் சேர்க்க வேண்டும்..

நிச்சயமாக, எஞ்சினியரிங் மோகத்துக்கு நீங்கள் சொல்வதும் ஒரு காரணி என்பதை ஏற்கிறேன்..

பினாத்தல் சுரேஷ் said...

ராமநாதன்..

/இப்பதிவு வலைப்பூக்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டது./

எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நாளாச்சு இப்படி ஒரு கமெண்டைப் பார்த்து! ஒரே அழுவாச்சியா வருது நோஸ்டால்ஜியாலே!

பினாத்தல் சுரேஷ் said...

/1. அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வுகள் சாத்தியமானால் இந்த +2 மோகம் குறையலாம்./

நிச்சயம் ஒத்துக்கொள்கிறேன். மார்க் வெறி என்பதில் புரிந்தோ புரியாமலோ மார்க் வாங்கினால் போதும். நுழைவுத்தேர்வுகள் - ஒன்றுக்கு இரண்டு விதமாக அதே கேள்விகளைக் கேட்கும்போது புரிந்திருக்க வேண்டும். ஆனால் நம் அரசியல்வாதிகள் கிராமம் நகரம் என்று சொல்லி இருந்த நுழைவையே கட் செய்துவிட்டார்கள் :-(

/ அரசுநிதி பெறும் பள்ளிகளிலோ பணிபுரியும் ஆசிரியர்கள் ட்யூஷன் எடுக்கக்கூடாது /

ம்ம்.. இதுபற்றி எனக்கு பெரிதாக கருத்து ஒன்றுமில்லை.

/அத்தகைய கல்விநிறுவனங்களில் படித்த காரணத்தினால் மட்டுமே பில் கேட்ஸாக ஒரே தலைமுறையில் மாறிவிடலாம் /

ஒன்னு இந்த எக்ஸ்டிரீம்..

இல்லாட்டி..

தோனி என்று ஒரு படம் பார்த்தேன். அதில் பையன் எக்ஸாம் நேரத்தில் கிரிக்கெட் கோச்சிங் போகிறானாம், அதைத் தடுக்கக் கூடாதாம்.. அடப்பாவிகளா, தோனியே ஒரு டிகிரி வாங்கிவிட்டுதான் கிரிக்கெட் ஆடுகிறார். ஃப்ரீயா விடறதுன்னா ஃப்ரீஈஈஈஈஈஈயா விடறது இல்லை..

/peer pressure என்பது பெற்றோர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது/

உண்மையோ உண்மை. மேலும்: /ஐம்பது வயதிலும் நாம் செய்யாத அகில உலக சாதனையெல்லாம் பதின்ம வயதில் நம்பிள்ளை செய்யவேண்டும் / இதுல இன்னொரு லாஜிக் என்னன்னா ந்ம்மாலதான் முடியல.. பையனுக்காச்சும் செய்வோமே.. எங்கப்பன் என்னை ஐஐடி கோச்சிங் அனுப்பல.. நான் அனுப்பறேன்..

டோனி நடால் - வாழ்த்துகள். தெரிஞ்சா இப்பவே உதைப்பான் :-)

துளசி கோபால் said...

அட! எஞ்சினியருக்கு இப்படி ஒரு மவுஸா????? கோபால் கிட்டே சொல்றேன். பாவம்..... அவரும் கொஞ்சம் மகிழ்ச்சியா உணரட்டும்!

விவாதங்களை ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கேன்.

@இராமநாதன்,

நீரா? எங்கேய்யா இருக்கீர்?

கனகாலமா ஆளைக் காணோமே!!!!!!

ஹுஸைனம்மா said...

//தோனி என்று ஒரு படம் பார்த்தேன். அதில் பையன் எக்ஸாம் நேரத்தில் கிரிக்கெட் கோச்சிங் போகிறானாம், அதைத் தடுக்கக் கூடாதாம்.. அடப்பாவிகளா, தோனியே ஒரு டிகிரி வாங்கிவிட்டுதான் கிரிக்கெட் ஆடுகிறார்//

Great people think alike!!

பார்க்க:
பதினேழாம் வாய்ப்பாடு

rv said...

அக்காஆஆஆஆஆஆ,
நலம். நானே தான். பேஸ்புக் சுவரொட்டி பாத்து வந்தேன் இங்க பலநாள் கழிச்சு.

நீங்க எப்படி இருக்கீங்க? மயில் பறக்கவிடறேன்.

Unknown said...

தெய்வம் மிஸ்ஸாகியிருச்சு போன பின்னூட்டத்துல்ல...

எல்லாத் தொழிலுக்கும் உண்டான மரியாதையை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழி என்ன? ஆராயலாமா...

இன்னொரு விஷயம் இன்னிக்கு எல்லா படிப்பு படிச்சவனும் கிட்டத் தட்ட ஒரே தொழில் ஐடியில்ல தான் இருக்காங்க...அப்போ படிப்புக்கும் தொழிலுக்கும் என்ன சம்பந்தம்..பிடிபடல்ல...

There is a big difference between career and job..any job pays...only through a career you can earn what u deserve..

முரளிகண்ணன் said...

முதல் தலைமுறையாக கல்வி கற்பவர்களைச் சொல்லவில்லை.

ஏதாவது ஒரு கல்வி கற்று ஒரளவு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானவர்கள், தங்கள் குழந்தைகள்,

தங்களைவிட ஒரு படி மேலே போக வேண்டும் என நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு கண்கண்ட மருந்தாய் இருப்பது இஞ்சினியரிங்.

அதனால்தான் அதிகப்படி பிரசர்.

ஆனால் இந்த நிலைமை மதுரை ஏரியா பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நிறைய கல்லூரிகளில் நன்கொடை இல்லை. பீஸ் மட்டும்தான்.

எனவே நல்லா படி என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

பெண் குழந்தைகளை பி எட், டி டி எட் படிக்க வைக்கிறார்கள்.


ஏனென்றால் அரசுப்பணி கிடைத்தால் நல்ல சம்பளம் என்பதால்.

25% மட்டுமே இப்போது பிரசர் கொடுக்கிறார்கள் நல்ல கல்லூரி வேண்டுமென.

முரளிகண்ணன் said...

சுரேஷ் சார்,

நான் இங்கு பின்னூட்டத்தில் தெரிவிப்பவை சமூகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களே.

சென்னை ஐ ஐ டி யில் பேராசிரியர்களின் குழந்தைகள் பெரும்பாலும் மேனேஜ்மெண்ட் சீட்தான். (எஸ் ஆர் எம் போன்ற கல்லூரிகளில்)

அவர்கள் பிரசர் கொடுப்பதில்லை. அங்கு உள்ள வனவானி பள்ளியில் கூட +2வுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நல்ல வசதி/பதவி உள்ளவர்களும்,
சுமாரான வசதி/பதவி உள்ளவர்களும் பிரசர் கொடுப்பதில்லை.

ஓரளவு பிரைட்டாய் இருந்து, பெரிய அளவில் சாதிக்க முடியாமல், தங்கள் தகுதியை விட குறைவான பதவி/வசதியில் இருப்பவர்கள்,

தங்கள் குழந்தைகள் தங்களைவிட ஒரு படி மேலே செல்ல வேண்டும் என பிரசர் கொடுக்கிறார்கள்.

முரளிகண்ணன் said...

சில ஆண்டுகளுக்கு முன்னர் +2 மாணவர்களைப் பார்த்தாலே தெரியும். பர பர வென பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அந்தளவுக்கு இல்லை.

இப்போது டி சி எஸ், விப்ரோ, சி டி எஸ் போன்றவை எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வளாகத் தேர்வு நடத்துகின்றன. அவற்றைப் பார்ப்பவர்கள் இங்க படிச்சாலும் தான் கேம்பஸ் வருதே, ஏன் அலையணும்
என்று பிள்ளைகளுக்கு அதிக பிரசர் கொடுப்பதில்லை.

இப்போது கல்லூரியைத் தேர்வு செய்வதில் ஜியாக்ரபிகல் பேக்டர் பெரும் பங்கு வகிக்கிறது.

எனவே +2 மார்க் தன் கவர்ச்சியை சில ஏரியாக்களில் இழந்து வருகிறது என்பது கண்கூடு.

தேவன் மாயம் said...

உடனடி காசு எஞ்சினியரிங்கில்தான். எனவே எஞ்சினியரிங்.

உங்கள் இடுகையிலிருந்து பல விசயங்கள் தெரிந்துகொண்டேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post.html) சென்று பார்க்கவும். நன்றி !

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.

Unknown said...

IT has to go out of India. Indians can just wake up and see the world...first and foremost reason is Government \ Corruption. you can get anything if you correct one minister in India. International politics involvement also taking its own place for keeping India under corruption. in my views, we have to bring fully electronic solutions to our government organizations. then slowly we can stop small scale corruptions. once people are aware of what they are trying to achieve, Engineering grace would go away from them. "BRING AWARENESS" - this is my counter argument.

 

blogger templates | Make Money Online